எமிலி டிக்கின்சன் (Emily Dickinson, டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார்.
டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.
டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கபபட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
(Source:கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)
நன்றி
மனுநாதன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக