திங்கள், 20 ஜனவரி, 2014

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும்...

மதமும் அதிகாரமும் ஒன்று சேரக்கூடாது.
-பிலிப் புல்மேன்

ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் என்ற நூலை
எழுதி வெளியிட்டுப் அண்மையில் புகழ் பெற்றுள்ளவர் பிலிப் புல்மேன்
என்பவர்.
ஏசு, கிறிஸ்து என்ற இரு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியுள்ள இந்த நூலில் கத்தோலிக்க தேவாலயத்தைக் கடுமையாக விமர்சிப்பவராக ஏசுவை அவர்
சித்திரித்துள்ளார். புல்மேன் ஒரு பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய Dark
Materials என்ற நூல் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பல
விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில்
கூறியிருப்பது இங்கே தரப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற நாத்திகர் என்று உங்களைப்
பற்றி கூறுகிறார்களே?

உண்மையில் அவ்வாறு கூறப்படுவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. முன்பு
இருந்ததை விட, வேறு எவ்வாறாகவும் இருப்பதை விட அதிகமாக என்னை நான்
நாத்திகன் என்று நிச்சயமாக நினைப்பதில்லை. பெயர்ச்சொற்களில்
குறிப்பிடப்படும் அடையாளங்களை நான் விரும்புவதில்லை. வினைச்சொற்களால்
அடையாளப்படுத்துவதையே நான் விரும்புகிறேன். அடையாளம் காண்பது என்பது
மாற்றம் பெற இயன்ற செயல்பாடு மிக்க, ஆற்றல் மிகுந்த நடைமுறையே அன்றி,
மாற்றமற்ற நிலையாகத் தேங்கி நிற்கும் ஒன்று அல்ல. கடவுள் நம்பிக்கை
கொண்டவனல்ல நான் என்பது பொதுமக்களிடையே அடையாளம் பெற்றுள்ள எனது முக்கிய
அம்சங்களில் ஒன்று என்ற உண்மையை நான் ஒப்புக் கொண்டாலும், என்னைப் பற்றி
அறியப்பட்டுள்ளது இது மட்டுமே என்றால், என்னைப் பற்றி எத்தகைய குறுகிய
கண்ணோட்டம் நிலவுகிறது, என்னைப் பற்றிய உண்மை எவ்வளவு குறைவாக புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது, என்ன குறுகிய அளவில் நான் புரிந்து
கொள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன்.
ஜீசஸ் என்ற நல்ல மனிதனும், கிறிஸ்து என்னும் அயோக்கியனும் மற்றும் Dark
Materials என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தங் களின் மூன்று புதின
நூல்கள் கத்தோ லிக்க தேவாலயத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த உருவகக்
கதைகளாகும். முறை யாக அமைக்கப்பட்ட மத அமைப்புக்கு எதிரானவரா தாங்கள்?
அல்லது கடவுள் என்னும் கருத்திலேயே தாங்கள் நம்பிக்கை
கொண்டிருக்கவில்லையா-?

எந்த வகையான ஒரு கருத்துக்கும் எதிராக இருப்பது முட்டாள்தனமானதாக
இருப்பதாகும். எனது விருப்பமின்மை அல்லது ஏற்பின்மை எட்ட இயலாத தொலைவில்
உள்ள, மிகவும் பழமையானதும், மிகப் பல மக்களுக்கு அர்த்தம் நிறைந்ததாகவும்
இருக்கும் கடவுள் போன்ற ஒரு கருத்துக்கு, நான் கூறுவது அல்லது செய்வது
எதனாலும் தீங்கு நேர்ந்துவிடாது. நான் ஏற்றுக் கொள்ளாமல்
கண்டிப்பதெல்லாம் மதமும் அரசியலும் கலப்பதைத்தான். மதத் தலைவர்கள்
அரசியல் அதிகாரத்தையும் பெறும்போது, எல்லாமே விரைவில் மிக மிக
மோசமானவைகளாக ஆகிவிடுகின்றன.

ஏசுவிற்கு கிறிஸ்து என்ற இரட்டைச் சகோதரர் இருப்பது என்பது போன்ற தங்
களின் கருத்து பெரும்பாலான கிறிஸ்து வர்களுக்கு தெய்வ நிந்தனையாகவே
தோன்றுகிறது. இந்த எண்ணம் உங் களுக்கு எவ்வாறு வந்தது?
அது தெய்வ நிந்தனையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால்
இரட்டையர்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்து என்னவோ, கிறித்துவ
மதத்தைப் போலவே பழமையானதாகும். சந்தேகப் பிறவியான தாமஸ் ஒரு இரட்டைப்
பிறவி. மனிதனான ஏசுவின் இயல்புக்கும், புராணக்கதையின் கிறிஸ்துவின்
இயல்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாடகமாக்கவே நான் முயன்றுள்ளேன்.

கிறிஸ்தவ மதத்தவராக வளர்ந்தவர் நீங்கள். கிறித்துவ தேவாலயத்தை இந்த
அளவுக்கு உங்களை விமர்சிக்கச் செய்தது எது-?

வெறுமனே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததும், வரலாற்றினைப்
படித்ததும்தான்.

கிறிஸ்துவ தேவாலயத்தைப் பற்றி தாங்கள் எழுதியிருப்பது இஸ்லாம், யூத மதம்
போன்ற மற்ற மதங்களைப் பொறுத்தவரையிலும் கூட உண்மையாகத் தான் இருக்க
வேண்டும். இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா-?

எனக்குத் தெரியவில்லை. நான் நினைப்பது போன்று உருவானது என்பதால்,
கிறித்துவ மதத்தைப் பற்றி என்னால் எழுத முடியும். கிறிஸ்துவ மதத்தைப்
பொறுத்தவரை நான் எனது வீட்டில் இருப்பதைப் போன்றது. அதன் நம்பிக்கைகளும்,
கதைகளும் எனக்குப் புதியவையல்ல. கிறித்துவ மதச் சடங்குகளும், கூட்டு
வழிபாடுகளும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. மற்ற மதங்களை இது
போன்று நான் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கதைகளைக் கூற நான்
முயலமாட்டேன்.
அடிப்படை மதவாதிகளைப் போலவே கூச்சலிடும் மூடநம்பிக்கையா ளர்கள் தானே
ரிச்சர்டு டாகின்ஸ் போன்ற புதிய நாத்திகர்களும்? மதத்தைப் பற்றி இரு வேறு
கருத்து கொண்டு இருக்கும் இரு சாராரின் நியாயமான குரலைக் கேட்க விடாமல்
மூழ்கடிக்கும் கூச்சலல்லவா அது? அது ஒரு தவறான குற்றச்சாட்டு.
உயிர்த்தோற்ற உயிரியல் துறையில் டாகின்ஸ் ஒரு மாபெரும் மேதை அவரிடம்
இருப்பதைப் போன்ற வெளிப்படையான நேர்மையை வேறு எங்கும் காணமுடியாது.
மிகுந்த ஆற்றலுடனும், மிகவும் தெளிவாகவும் அவர் எழுதுகிறார். அவரால்
கண்டிக்கப்படும், விமர்சிக்கப் படும் மனிதர்கள் அதை விரும்புவதில்லை.
எவர் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்க டாகின்ஸ் விரும்பியதாக நான்
எப்போதும் கேள்விப்பட்டதே இல்லை. தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின்
தலையை வெட்டவேண்டும் என்று பதாகை எடுத்துக் கொண்டு அவர் தெருவில் வந்து
கேட்பதை நீங்கள் பார்க்காத வரை, அவரது கருத்து மதஅடிப்படை வாதிகளின்
கருத்து போன்றது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அடிப்படையற்றது.

(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா கிரெஸ்ட் எடிஷன் 5.6.2010)
(தமிழில்: சி.மனுநாதன்)