வியாழன், 12 பிப்ரவரி, 2015

இதயமே...இதயமே....! (காதலர் தின சிறப்பு பதிவு)

உனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள். அவளை நீ தேடாதே. தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.


உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள். அவ்வளவுதான்...

உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.


"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று."


தும்மினபோது "Bless you" என்று வாழ்த்தி விட்டு..."ஆமாம்! நான் உன்னை நினைக்கலியே....யார் உன்னை நினைத்து தும்மியது." என்று அதீத ஆக்கிரமான அன்பை காண்பிக்கும் மிக சுவாரஸ்யமான திருக்குறளை போல வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.

வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.






யாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.

 நண்பர்கள் திட்டுவார்கள்.

திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.


காதலித்துப்பார்...காதலிக்கப்பட்டுப்பார்...!!